ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்வதற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு

ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்வதற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்வதற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு
Published on

ஜோலார்பேட்டை,

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து டேங்கர்கள் பொருத்தப்பட்ட சரக்கு ரெயில் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய ரூ.63 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து குடிநீர் கொண்டு வரும்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் குழுவினர் ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை ரெயில்வே கேட் என்ற இடத்தில் ரெயில்வேக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஜோலார்பேட்டை அருகே மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காவிரி கூட்டுக் குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் உள்ள 5 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய 3 இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அதிகாரிகள் கூறியதாவது:-

டேங்கர் பொருத்தப்பட்ட சரக்கு ரெயில் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மேலும் நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் என 4 தவணையில் குடிநீர் ரெயில் மூலம் ஏற்றி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வில் ஈடுபட்டுள்ளோம்.

3 இடங்களை தேர்வு செய்து, விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு ஓரிரு நாட்களில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு குடிநீர் வினியோகம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com