

நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், வேளாண்மை இணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி:- நாகையில் இருந்து செல்லூர் செல்லும் சாலையில் பாரதிதாசன் உறுப்பு மற்றும் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பஸ் வசதிகளை செய்து தரவேண்டும். மேலும் அந்த பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கோபி கணேசன்:- கடந்த ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் சம்பா மற்றும் தாளடி நெய்பயிர் கள் முற்றிலும் மூழ்கி அழிந்து விட்டன. இதற்கான நிவாரண தொகை இதுவரை வழங்க வில்லை. உடனே நிவாரண நிதியை வழங்க வேண்டும்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன்:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. நாகை மாவட்டத்திற்கு சிறப்பு நுண்ணுயிர் பாசன திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.834 கோடி நிதி ஒதுக்கியது. இதில் ரூ. 413 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மீதம் உள்ள 50 சதவீத தொகை மத்திய அரசிடமே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரபாகரன்:- நரிமணம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக அந்த பகுதியில் 600 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. இந்த திட்டம் மக்களின் கருத்து கேட்பு இல்லாமல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும் இந்த திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்த கலெக்டர் சுரேஷ்குமார், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.