

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கைக்கொள்வார் தெருவைச் சேர்ந்தவர் முதியவர் ஷேக்மைதீன் (வயது70). இவருக்கு சொந்தமான வீட்டு மனை ராஜா உசேன் என்பவர் பெயருக்கு தவறுதலாக மாற்றி பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீண்டும் தன்னுடைய பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்றும் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மனுவை விசாரித்த ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மைதீன் தரப்பில் நியாயம் இருப்பதாகவும் உண்மை இருப்பதாக கூறி அவரது பெயருக்கு பட்டாவை மாற்றி தரும்படி சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாகவும், கோட்டாட்சியரின் உத்தரவை அலட்சியப்படுத்துவதாகவும் கூறி ஷேக்மைதீன் நேற்று திடீரென்று ராமநாதபுரம் தாலுகா அலுவலக வாயிலில் படுக்கை விரித்து படுத்து நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து தாலுகா அலுவலக அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து முதியவர் ஷேக்மைதீனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து முதியவர் இனியும் தாமதம் செய்தால் தாலுகா அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழியில்லை என்று கூறி அங்கிருந்து சென்றார்.