செய்யாறில் பட்டப்பகலில் பயங்கரம்: ஓடும் பஸ்சில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

செய்யாறில் பட்டப்பகலில் வாலிபரை ஓட, ஓட விரட்டிச்சென்று பஸ்சில் வைத்து சரமாரியாக ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்யாறில் பட்டப்பகலில் பயங்கரம்: ஓடும் பஸ்சில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
Published on

செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் புதிய காஞ்சீபுரம் சாலையில் சவுந்திரி திரையரங்கம் பஸ் நிறுத்தத்தின் அருகே உள்ள டீக்கடையில் நேற்று பகல் 11 மணியளவில் டீ குடிக்க வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு காரில் வந்த 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் காரில் இருந்து அரிவாளுடன் கீழே இறங்கி டீக்கடையில் நின்று கொண்டிருந்த வாலிபரை வெட்டினர். இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து உயிர்தப்ப அங்கிருந்து ஓடினார். அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறுக்கு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்பதற்காக மெதுவாக வந்தது. அந்த தனியார் பஸ்சில் வாலிபர் தாவி ஏறினார்.

அவரை பின்தொடர்ந்து விரட்டிவந்த மர்ம கும்பலும் அரிவாள்களுடன் பஸ்சின் முன்வாசல் வழியாகவும், பின்வாசல் வழியாகவும் ஏறியது. அப்போது மர்ம நபர்கள், டிரைவரை அரிவாளை காட்டி மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பயணிகளுடன் பஸ்சை அப்படியே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். உடனே, டிரைவர் சீட்டிற்கு பின்சீட்டில் இருந்த அந்த வாலிபரை மர்ம நபர்கள் தலை, முகம் மற்றும் உடல் முழுவதும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அந்த வாலிபர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். இதனை சற்றும் எதிர்பாராத பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து மர்ம நபர்கள் அரிவாள்களுடன் சாவகாசமாக தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பி.சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ்சில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் பஸ்சை பறிமுதல் செய்து, செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம், மடம் தெருவை சேர்ந்த முருகன்காளத்தி என்பவரின் 3-வது மகன் சதீஷ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகாததால் பரிகாரம் செய்தால் திருமண தடை நீங்கும் என்றும், காஞ்சீபுரத்தில் இருந்து வேறு ஊருக்கு இடம் பெயர்ந்தால் சதீஷ்குமாருக்கு நல்லது நடக்கும் என்றும் ஜோதிடர்கள் கூறியதால் காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு டவுன் வேல்சோமசுந்தரம் நகர் பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமார் குடும்பத்துடன் வந்ததும் தெரியவந்தது.

அங்கு வசித்து வந்த சதீஷ்குமார் திருமண தடை நீங்க கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். நேற்று காலை கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை டீக்கடையின் முன்பு நிறுத்திவிட்டு டீ குடிக்க காத்திருந்த போது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தையும், செய்யாறு போலீஸ் நிலையத்தில் உள்ள பஸ்சையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி பார்வையிட்டார். மேலும் பஸ் டிரைவர், கண்டக்டர், பரிசோதகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் மர்ம நபர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரம், குணசேகரன், தங்கராமன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்யாறில் பட்டப்பகலில் மர்ம கும்பல் வாலிபரை ஓட, ஓட விரட்டி சென்று பஸ்சுக்குள் வைத்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com