

புதுச்சேரி,
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததை கண்டித்து உள்ளாட்சி கூட்டமைப்பு மற்றும் சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக உள்ளாட்சி கூட்டமைப்பு, சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அவர்கள் நேற்று ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் அலுவலகம் முன்பு கூடினார்கள். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கு ஊதி, மேளம் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்துக்கு உள்ளாட்சி கூட்டமைப்பு தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமசாமி, ராஜா, ராமுநாயக்கர், ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, தமிழர் களம் அழகர், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.