விசுவ இந்து பரிஷத் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரி மாநாடு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரி விசுவ இந்து பரிஷத் சார்பில் பெங்களூருவில் மாநாடு நடைபெற்றது.
விசுவ இந்து பரிஷத் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரி மாநாடு
Published on

பெங்களூரு,

விசுவ இந்து பரிஷத் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வரதீர்த்த சுவாமி உள்பட பல்வேறு மடாதிபதிகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் மிலிந்த் பரான்டே கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

இங்கு ராமபக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த மாதம்(நவம்பர்) 25-ந் தேதி அயோத்தியில் மாநாடு நடைபெற்றது. இதில் மடாதிபதிகள் கலந்து கொண்டனர். இந்த மாதம் டெல்லியில் மாநாடு நடக்கிறது. இதில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ராமர் கோவில் இடிக்கப்பட்டது.

ராமர் கோவில் கட்டும் விவகாரம் கோர்ட்டுக்கு முக்கியமான விஷயம் கிடையாது என்று நீதிபதிகள் சொல்கிறார்கள். இது வேதனை அளிக்கிறது. இந்துக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மதிப்பு இல்லையா?. ராமர் கோவில் கட்ட கோர்ட்டு அனுமதி தேவை இல்லை. ராமர் கோவில் விவகாரத்திற்கு எதிராக சதி நடக்கிறது. இவ்வாறு மிலிந்த் பரான்டே பேசினார்.

இந்த மாநாட்டில் விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள், காவி கொடிகளுடன் கலந்து கொண்டனர். முன்னதாக பெங்களூருவில் ராமர் சிலையுடன் இந்து அமைப்பினர் பேரணியாக வந்தனர். பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் மாநாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com