சிக்னலில் நின்றபோது விபத்து மோட்டார் சைக்கிள்கள் மீது டிப்பர் லாரி மோதல்; 2 பேர் பலி டிரைவர் படுகாயம்

செங்குன்றம் அருகே சிக்னலில் நின்ற 2 மோட்டார்சைக்கிள்கள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். டிப்பர் லாரி டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சிக்னலில் நின்றபோது விபத்து மோட்டார் சைக்கிள்கள் மீது டிப்பர் லாரி மோதல்; 2 பேர் பலி டிரைவர் படுகாயம்
Published on

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜான்சன்(வயது 54). இவர், சென்னையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மகன் சுர்ஜித் (28). இவரும், தந்தை நடத்தி வரும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

தந்தை-மகன் இருவரும் நேற்று காலை தங்களின் செக்யூரிட்டி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். மோட்டார்சைக்கிளை சுர்ஜித் ஓட்டினார். ஜான்சன் பின்னால் அமர்ந்து இருந்தார்.

செங்குன்றம் அருகே சோத்துப்பாக்கம் சிக்னலில் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இதேபோல் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்த ஆவடி காமராஜர் நகர் ராஜாஜி தெருவை சேர்ந்த சந்திரபாபு (48) என்பவரும் சிக்னலுக்காக மோட்டார் சைக்கிளில் அங்கு நின்று கொண்டிருந்தார்.

அப்போது சோழவரத்தில் இருந்து புழல் நோக்கி தார் சாலை போடுவதற்காக ஜல்லியை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி, சிக்னல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த ஜான்சன், சந்திரபாபு ஆகியோரின் மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது.

மேலும் அந்த டிப்பர் லாரி, சிக்னலில் நின்று கொண்டிருந்த மற்றொரு டிப்பர் லாரி மீது மோதி நின்றது. டிப்பர் லாரி மோதியதில் 2 மோட்டார் சைக்கிள்களும் அப்பளம் போல் நொறுங்கின. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய சுர்ஜித், லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டதால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்த அவருடைய தந்தை ஜான்சனும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் நிறுவன மேலாளர் சந்திரபாபுவும் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்தது காலை நேரம் என்பதால் சோத்துப்பாக்கம் சிக்னலில் ஏராளமான பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். வேகமாக வந்த லாரி அங்கு நின்றிருந்த டிப்பர் லாரி மீது நின்று விட்டது. இல்லாவிட்டால் தொடர்ந்து ஓடி சிக்னலுக்காக காத்திருந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது மோதி பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி இருக்கும்.

டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவரான மணலி இடையஞ்சாவடி பழைய நாப்பாளையத்தை சேர்ந்த அருணகிரி (40) இரண்டு லாரிகளுக்கும் நடுவில் சிக்கி தவித்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலத்த காயங்களுடன் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் செங்குன்றத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com