புகார் மீது விசாரணை நடத்தாத போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா எச்சரிக்கை

பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா எச்சரித்துள்ளார்.
புகார் மீது விசாரணை நடத்தாத போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா எச்சரிக்கை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா தலைமையில் போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போலீஸ் ஐ.ஜி.சுரேந்திரசிங் யாதவ், டி.ஐ.ஜி. ஈஸ்வர் சிங் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:-

மக்கள் வரிப்பணத்தில் தான் அனைவரும் ஊதியம் பெறுகிறோம். பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது போலீஸ் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் விசாரணையின்போது யாருடைய குறுக்கீடு, மிரட்டல் இருந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் பணியை சரியாக செய்யுங்கள். நான் உங்களுக்கு உறுதுணையாக நிற்கிறேன்.

காவல்துறை தலைமையகத்தில் நாள்தோறும் நடைபெறும் மக்கள் சந்திப்பு நேரத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிய வந்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும். உண்மை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மிஷன் வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டு பெண்கள் தவறவிட்ட மடிக்கணினிகள், வீடியோ கேமரா, ரொக்கப்பணம் ஆகியவற்றை பெரியகடை போலீஸ் நிலையத்தில் உடனடியாக மீட்டு கொடுத்தனர். அதற்காக பெரியகடை போலீசாரை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com