பிறந்த நாளில் இறந்த சோகம்

மதுரையில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிறந்த நாளில் இறந்த சோகம்
Published on

மதுரை,

தீயணைக்கும் பணியின்போது இறந்த சிவராஜன், மதுரை மாவட்டம் செக்கானூரணியை சேர்ந்தவர். இவருக்கு அங்கையற்கன்னி (28) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகனும், தன்வீன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சிவராஜன் கடந்த 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

பலியான மற்றொரு வீரர் கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊர் மதுரை அருகே உள்ள திருப்புவனம். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணத்துக்கு பெண் பார்த்து வந்ததாக சக வீரர்கள் தெரிவித்தனர். இவர் முதலில் காரைக்குடியில் பணியாற்றி வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு தான் மதுரைக்கு மாறுதலாகி வந்தார். தீபாவளி அன்று அவருடைய பிறந்த நாளாகும். அந்த நாளிலேயே அவர் உயிரிழந்தது சகவீரர்கள், உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு சிவகங்கை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியகுமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு மாவட்ட காவல் துறையின் சார்பாக அரசு மரியாதை செலுத்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க கிருஷ்ணமூர்த்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மதுரை பெரியார் தீயணைப்பு நிலைய சக வீரர்கள் கூறுகையில், சிவராஜன் எங்களது தீயணைப்பு நிலையத்திற்கு வரும் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளை எடுப்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார். அதுமட்டுமின்றி எந்த இடத்திற்கு சென்றாலும் தன்னால் முடிந்த வரை மக்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார். மிகவும் தைரியமான தீயணைப்பு வீரர். தீயை அணைக்கும் சம்பவங்களுக்கு செல்லும் போது கூட முன்னிட்டு வழிநடத்தி செல்லும் திறன் கொண்டவர். அவர் தான் முதலில் உள்ளே செல்வார். அன்றைய தினமும் அவர் தான் உள்ளே சென்றார். அங்குள்ள சுவர்கள் பழமையானதாக இருந்தால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன் காரணமாக நல்ல ஒரு தைரியமான தீயணைப்பு வீரரை இழந்து விட்டு தவிக்கிறோம். என கண்ணீர் மல்க கூறினர்.

ஜவுளி குடோனிலும் தீ விபத்து

மதுரை மகால் 2-வது தெருவில், பிரபல ஜவுளிக்கடைக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த டவுன் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ பரவ விடாமல் தடுத்ததுடன் முழுவதுமாக அணைத்தனர். தொடக்க நிலையிலேயே தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று ஒரே நாளில் 2 இடங்களில் ஜவுளிக்கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com