நில அபகரிப்பு பிரச்சினையில் கவர்னர் மாளிகை முன் அண்ணன், தம்பி தீக்குளிக்க முயற்சி

தங்களது நிலத்தை அபகரிக்க முயற்சித்து மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறி புதுவை கவர்னர் மாளிகை முன் அண்ணன், தம்பி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நில அபகரிப்பு பிரச்சினையில் கவர்னர் மாளிகை முன் அண்ணன், தம்பி தீக்குளிக்க முயற்சி
Published on

புதுச்சேரி,

புதுவை மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள். இவருடன் பிறந்த சகோதரர்கள் 5 பேர். இவர்கள் தங்களது குடும்ப சொத்துக்களை பிரித்துக் கொண்டனர். தனது பாகத்தில் தற்போது அருள் வீட்டு கட்டும் பணிகளை செய்து வந்தார். இந்தநிலையில் தனது சகோதரரான ஆறுமுகத்துக்கு சொந்தமான நிலத்தை அந்த பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் போலி பத்திரம் தயாரித்து அபகரிக்க முயற்சிப்பதாக அருள் புகார் தெரிவித்தார்.

இந்த பிரச்சினை 5 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த நிலையில் அருள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கோர்ட்டு உத்தரவையும் மீறி பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் எதிர்தரப்பினர் நுழைந்ததாக தெரிகிறது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் அருள் தரப்பினர் முறையிட்டனர். அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்த இடத்தில் அருள் தரப்பு கட்டுமானப் பணியை தொடங்கியது. ஆனால் அரசியல் தலையீடு காரணமாக அவர்களுக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த அருள், ஆறுமுகம் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் கவர்னர் கிரண்பெடியிடம் புகார் கொடுப்பதற்காக வந்தனர். தலைமை தபால் நிலையம் அருகே ரங்கபிள்ளை வீதி- சந்திப்பில் போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்ததால் அவர்களால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீசாரிடம் கவர்னர் மாளிகையில் புகார் மனு கொடுக்க தங்களை அனுமதிக்குமாறு அவர்கள் கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த அருள், ஆறுமுகம் ஆகியோர் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்ணெண்ணையை தங்களது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப் பார்த்ததும் போலீசார் உஷாரானார்கள். உடனே அவர்களிடம் இருந்த மண்ணெண்ணை கேனை பறித்ததுடன் அருள், ஆறுமுகம் ஆகிய இருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் வாகனம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அண்ணன், தம்பிகளான அருள், ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து சட்டசபை, கவர்னர் மாளிகையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com