வேலூர் கிரீன் சர்க்கிளில் காட்பாடி சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை - வைரலாகிய வீடியோ எதிரொலி

வேலூர் கிரீன் சர்க்கிளில் காட்பாடி சாலையில் விபத்துகளை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. வைரலாகும் விபத்து வீடியோவால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் கிரீன் சர்க்கிளில் காட்பாடி சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை - வைரலாகிய வீடியோ எதிரொலி
Published on

வேலூர்,

வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல்அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வேலூர் நகரத்தில் பல இடங்கள் ஸ்தம்பித்து போகிறது. கிரீன் சர்க்கிள் முக்கிய பகுதி என்பதால் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

கிரீன் சர்க்கிளில் இருந்து காட்பாடி செல்லும் சாலையில் ஒரு சில வாகனங்கள் புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பாதையில் எதிர்திசையில் சென்றன. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் மோதும் சூழல் இருந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பஸ் ஒன்று இந்த சாலையில் எதிர்திசையில் சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பஸ் சென்று கொண்டிருந்தபோது அதன் மீது மோட்டார்சைக்கிள் மோதுவதும், பஸ் கண்ணாடி உடைந்து சாலையில் விழுவதும், பயணிகள் அலறுவதும், மோட்டார்சைக்கிளில் வந்த நபர் தூக்கி வீசப்படுவதுமான காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ வைரலானதால் அதன் எதிரொலியால் அந்த பகுதியில் இதுபோன்று விபத்து ஏற்படாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து காட்பாடிக்கு செல்லும் வாகனங்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் செல்லும் சாலையில் எதிர்திசையில் செல்லாத வகையில் சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் சீராக செல்கிறது. இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com