மெட்ரோ ரெயில் பணியின்போது மாநகர பஸ் மேற்கூரையில் இரும்பு கம்பிகள் விழுந்ததால் பரபரப்பு பயணிகள் உயிர் தப்பினர்

திருவொற்றியூரில், மெட்ரோ ரெயில் பணியின்போது இரும்பு கம்பிகள் மாநகர பஸ்சின் மேற்கூரையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
மெட்ரோ ரெயில் பணியின்போது மாநகர பஸ் மேற்கூரையில் இரும்பு கம்பிகள் விழுந்ததால் பரபரப்பு பயணிகள் உயிர் தப்பினர்
Published on

திருவொற்றியூர்,

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ராட்சத தூண்கள் அமைக்கப்படுகிறது.

திருவொற்றியூர் விம்கோ நகரில் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது மேம்பாலம் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு வருகிறது.

நேற்று காலை மீஞ்சூரில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை செல்லும் மாநகர பஸ்(தடம் எண் 56பி) பயணிகளை ஏற்றிக்கொண்டு விம்கோ நகர் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு மெட்ரோ ரெயில் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து மாநகர பஸ்சின் மேற்கூரை மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இரும்பு கம்பிகள் விழுந்ததில் மாநகர பஸ்சின் மேற்கூரை சேதம் அடைந்தது.

இதனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியார் நகர், திருவொற்றியூர் மார்க்கெட், எல்லைஅம்மன் கோவில் தெரு போன்ற பல இடங்களில் இதுபோன்று மெட்ரோ ரெயில் பணிக்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் சரிந்து விழுவதும், இரும்பு தகடுகள் சரிந்துவிழுவது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் மெட்ரோ ரெயில் பணியை பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக மேற்கொள்ளவேண்டும் என்றும், பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com