தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய நாட்டுக்கோழி சந்தை கடும் விலை உயர்வு

சேதுபாவாசத்திரம் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டுக்கோழி சந்தை களை கட்டியது அதே நேரத்தில் நோய் காரணமாக ஏராளமான கோழிகள் அழிந்ததால் நேற்று நடந்த சந்தையில் கோழிகள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய நாட்டுக்கோழி சந்தை கடும் விலை உயர்வு
Published on

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதிகள் அதிக கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த பகுதிகள், வீடுகளில் நாட்டுகோழி வளர்ப்பிற்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி இங்குள்ள பெண்கள் அதிகம் பேர், தங்கள் வீடுகளில் சிறு தொழில் போல நாட்டுக்கோழிகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர்.

இந்த கோழிகளை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது போக மற்றவைகளை தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, ரம்ஜான், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விற்பனை செய்வதுடன் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தங்களது வீட்டில் பண்டிகைகளுக்கு பயன்பெறும் வகையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

பூக்கொல்லை கடை வீதியில்...

இதனால் நாட்டு கோழி வளர்ப்பை கிராம பகுதி பெண்கள் அதிக அளவில் விரும்பி செய்து வருகின்றனர். அப்படி வளர்க்கப்படும் கோழிகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் பேராவூரணியில் நடைபெறும் வாரசந்தை தினத்தன்று பூக்கொல்லை கடைவீதியில் கோழி மட்டும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் கோழி விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். மேலும் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக மொத்தமாக வாங்கி ஏற்றி சென்று விடுவது வழக்கமாக நடந்து வருகிறது.

விலை கடும் உயர்வு

அதே நேரத்தில் தற்போது நோயினால் அதிகமான கோழிகள் அழிந்து விட்டது. இதனால் விற்பனைக்கு கோழியின் வரத்து குறைந்து விலை கடும் உச்சத்தை தொட்டது. சாதாரணமாக 1 கிலோ எடை கொண்ட கோழி ரூ.300 முதல் 400 வரை விற்பனையாகும்.

ஆனால் தற்போது ரூ.600 முதல் 700 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்ந்தாலும் விற்பனைக்கு கோழி கிடைக்காமல் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com