நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.48 லட்சத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடம் - கலெக்டர் மெகராஜ் ஆய்வு

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.48 லட்சத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடம் - கலெக்டர் மெகராஜ் ஆய்வு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடம், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தரைத்தளம் 151.60 சதுர மீட்டர், முதல் தளம் 62.70 சதுரமீட்டர் என மொத்தம் 214.30 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்குவதற்காக இந்த கட்டிடத்தில் தனி அறையும், காவல்துறை பணியாளர் அறை, சட்ட ஆலோசகர் அறை, வழக்கு பணியாளர் அறை, மனநல ஆலோசகர் அறை என தனித்தனியே அறைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் வசதிக்காக உணவுக்கூடம், சமையலறை, கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொண்டு கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டு உள்ள திரவ ஆக்சிஜன் சேமிப்பு கலனை பார்வையிட்டார்.

மேலும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெயந்தி, தேசிய நலக்குழும ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேன்மொழி, அசோகன் உள்பட டாக்டர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com