ஆவடியில் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி

ஆவடியில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஆவடியில் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி
Published on

ஆவடி,

ஆவடியில் இருந்து கோவில் பதாகை நோக்கி சாலை செல்கிறது. ஆவடியில் இருந்து வாணியன் சத்திரம், வெள்ளானூர், வீராபுரம், மோரை ஆகிய பகுதிகளுக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் கோவில் பதாகை சாலையில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டுமே பணிகள் முடிந்துள்ளது.

இந்த நிலையில் அந்த சாலையில் கீழ் பதாகை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி உள்ளது.

மேலும், சில நேரங்களில் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அந்த கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடியாததால் வீடுகளில் உள்ள கழிவுநீரை பாதாள சாக்கடையில் விடுவதற்கு நகராட்சி சார்பில் முறைப்படி அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும் பூம்பொழில் நகர், அசோக் நகர், கோவில் பதாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் இருந்து திருட்டுத்தனமாக கழிவுநீரை குழாய் மூலம் பாதாள சாக்கடையில் விடுகின்றனர். ஏற்கனவே சில பகுதிகளில் பணிகள் முடியாததால் அந்த நீர் மேலும் செல்ல வழியின்றி சாலைகளில் வெளியேறி தேங்கி விடுகிறது.

இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகள், தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடியிருப்பு வாசிகள் திருட்டுத்தனமாக பாதாள சாக்கடை குழாயில் வீட்டின் கழிவுநீரை திறந்து விடுகின்றனர். நகராட்சி அதிகாரிகள் இவற்றை அறிந்தாலும் கண்டுகொள்வதில்லை. எனவே விரைந்து இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடிக்க வேண்டும். மேலும், சாலைகளில் ஆறாக ஓடும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com