அரசு செயலாளர் மீது உரிமை மீறல் புகார்

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட்ட அரசு செயலாளர் மீது சபாநாயகர் வைத்திலிங்கத்திடம், உரிமை மீறல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு செயலாளர் மீது உரிமை மீறல் புகார்
Published on

புதுச்சேரி,

புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர நியமன எம்.எல்.ஏ.க்களாக 3 பேரை நியமித்துக்கொள்ள அதிகாரம் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே புதுவை மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து அறிவித்தது. அவர்களை எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார்.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி அவர்கள் 3 பேருக்கும் தனது மாளிகையில் வைத்து நியமன எம்.எல்.ஏக்களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர்கள் 3 பேரையும் நியமன எம்.எல்.ஏ.க்களாக சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரத்தில் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இதுபற்றிய விவகாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க சட்டப்பேரவை செயலாளருக்கு அமைச்சரவை துறையின் சார்பு செயலாளர் கண்ணன், உத்தரவு பிறப்பித்தார். இது புதுவை அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க சட்டப் பேரவை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்த சார்பு செயலாளர் கண்ணன் மீது சபா நாயகர் வைத்திலிங்கத்திடம், அரசு கொறடா அனந்த ராமன் உரிமை மீறல் புகார் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசின் ரகசியம் மற்றும் அமைச்சரவை துறையின் சார்பு செயலாளர் கண்ணன் சட்டப்பேரவை செயலாளருக்கு கடந்த 26-ந் தேதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், உள்துறை அமைச்சகத்தின் 21.11.2017 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டவாறு நியமிக்கப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சம்பளம், இதர சலுகைகளை உடனடியாக அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி அவர்களுக்கு உரிய உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கித்தர ஆவன செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி துறை செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சபாநாயகர் 12.11.2017 தேதியிட்ட உத்தரவின்படி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அந்த 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கிலும் விவாதம் நடைபெற்று தீர்ப்பு எதுவும் சொல்லப்படாத நிலை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மானிய கோரிக்கைகளில் உள்ளாட்சித் துறையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 30 தொகுதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 3 நபர்களுக்கும் நிதி ஒதுக்குவது என்பது சபாநாயகரின் உத்தரவையும், சட்டபேரவையையும் அவமதிப்பது மட்டுமல்லாமல் சபை உரிமை மீறலாகும். எனவே இதனை அவையின் உரிமை மீறலாக எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அரசு செயலாளர் மீது அரசு கொறடா உரிமை மீறல் புகார் கொடுத்து இருப்பது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com