சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் மீது போலீசில் புகார் 2018-ம் ஆண்டில் சேர்ந்து 2-ம் ஆண்டு படித்து வருகிறார்

மருத்துவ படிப்பில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்து இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் மீது போலீசில் புகார் 2018-ம் ஆண்டில் சேர்ந்து 2-ம் ஆண்டு படித்து வருகிறார்
Published on

சென்னை,

2019-20-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடந்து முடிந்து, வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருந்த மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், வேறு சிலரும் இந்த ஆள்மாறாட்ட புகாரில் சிக்கினர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் உள்ளது.

இந்த நிலையில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் ஒரு மாணவரின் புகைப்படம் சற்று மாறி இருப்பதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் சந்தேகித்து இருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்து, தற்போது 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் மீது தான் இந்த குற்றச்சாட்டு பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாணவர் நீட் தேர்வை பீகாரில் இந்தி மொழியில் எழுதி உள்ளார். ஆனால் அவருக்கு இந்தி தெரியாமல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட மாணவர் மீது சென்னை மருத்துவ கல்லூரி டீன் ஜெயந்தி, பூக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்து இருக் கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த மாணவர், சேர்க்கைக்குழுவிடமும் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில்தான் அவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டாரா? என்பது தெரியவரும்.

தொடர்ந்து ஆள்மாறாட்டம் புகார் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், வேறு யாராவது இதுபோன்ற ஆள்மாறாட்டம் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க புது யுக்தியை மருத்துவ கல்வி இயக்குனரகம் கையில் எடுத்து இருக்கிறது.

அதாவது, நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் கைரேகை பெறும் திட்டம், இந்த ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி, தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதி கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவர்களின் கைரேகை பதிவை நீட் தேர்வு முகமையிடம்(என்.டி.ஏ.) இருந்து மருத்துவ கல்வி இயக்குனரகம் கேட்டு பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த கைரேகையை கொண்டு, தற்போது கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கைரேகை பொருந்தாத மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ஆள்மாறாட்டம் புகார் எதிரொலியாக, அடுத்த ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, அவர்களின் கைரேகை பதிவை கட்டாயமாக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது, அதனுடன் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தையும் அதில் இணைப்பதற்கான ஆலோசனையிலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com