விலங்குகளை துன்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

விலங்குகளை துன்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனஅலுவலர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
விலங்குகளை துன்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

சேலம்,

சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் காட்டெருமை, புள்ளிமான்கள் அதிகம் உள்ளன. இவை இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பாங்கான வனப்பகுதிகளில் வாழ்கின்றன. அவற்றை வேட்டையாடவோ, துன்புறுத்தவோ கூடாது. இதனை மீறி செயல்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

வனப்பகுதிகளில் தீவனம், தண்ணீர் மிகுதியாக இருந்தாலும் அவை அனைத்து பகுதிகளிலும் சீராக கிடைப்பதில்லை. எனவே பல்வேறு காரணங்களால் விலங்குகள் வனப்பகுதிகளை விட்டு சில நேரங்களில் வெளியே வருகின்றன. பொதுவாக வன உயிரினங்கள் மனிதர்களை கண்டால் பயந்து ஓடும். காரணம் அவை மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதிகளில் வாழப்பழகியவை. ஆனால் மனிதர்களுக்கோ மற்ற கால்நடைகளுக்கோ தீங்கு விளைவிப்பவை அல்ல. தீவனம், தண்ணீரையும் பூர்த்தி செய்து கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும்.

ஒரு சில விலங்குகள் வழி தவறி மனித வாழ்விடங்களில் நுழைந்து விடுகின்றன. அப்போது தெரு நாய்கள் துரத்தும் போது அவை உயிருக்கு பயந்து விளை நிலங்களில் தஞ்சமடைகின்றன. அவ்வாறு ஏற்படும்போது பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். அப்போது வனத்துறை கள அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பார்கள்.

தேவைப்பட்டால் வருவாய், தீயணைப்பு, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளை அழைத்து அவர்கள் உதவியோடு வன விலங்கிற்கோ, பொது மக்களுக்கோ எந்தவொரு சேதமும் ஏற்படாமல் வன விலங்குகளை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுவார்கள். எனவே ஊருக்குள் புகும் வன விலங்குகளை துன்புறுத்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com