காதலர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகள் விரட்டியடிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகளை போலீசார் விரட்டியடித்தனர். பள்ளி மாணவ-மாணவிகளை எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகள் விரட்டியடிப்பு
Published on

வேலூர்,

வேலூரின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான கோட்டை முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோட்டையை காண வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினமும் வருகின்றனர். இதனால் வேலூர் கோட்டையில் எப்போதும் கூட்டம் காணப்படும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலூர் கோட்டையில் காதலர்கள் என்ற போர்வையில் சில ஜோடிகள் அநாகரிகமாக நடந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆயுதப்படை பெண் போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் கோட்டையில் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு இந்து முன்னணி உள்பட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காதலர் தினத்தன்று பொது இடங்களில் அத்துமீறி நடக்கும் காதல் ஜோடிக்கு அதே இடத்தில் இலவச திருமணம் செய்து வைக்கப்படும் என இந்து முன்னணியினர் எச்சரித்துள்ளனர்.

எனவே கோட்டையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசார் அங்கு வரும் காதல் ஜோடிகளை எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்குமாறு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதையடுத்து கோட்டையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான காதல் ஜோடிகள் நேற்றைக்கே கோட்டைக்கு வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். சில காதல் ஜோடிகள் போலீசாரின் எச்சரிக்கையும் மீறி கோட்டைக்குள் சென்றனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சீருடையை மாற்றி விட்டு வேறு உடையில் கோட்டைக்கு ஜோடியாக வந்திருந்தனர். பள்ளி சீருடையை புத்தக பையில் வைத்திருந்ததை பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ஜோடியாக கோட்டைக்கு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி அங்கிருந்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com