

வேலூர்,
வேலூர் ஆற்காடு சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகள் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடமாநிலத்தவர்களை குறி வைத்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் வேலூரில் அதிகரித்து வருகின்றன. சிகிச்சைக்கு வருபவர்கள் சிகிச்சை முடிந்து தங்கள் மாநிலங்களுக்கு உடனே செல்வதால் பலர் புகார் கொடுப்பதில்லை. இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணி அளவில் ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே செல்போனில் பேசியபடி மேற்கு வங்காள வாலிபர் நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து ஒரே மோட்டார்சைக்கிளில் சென்ற 2 மர்ம நபர்கள் திடீரென செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். செல்போனை பறி கொடுத்த நபர் செய்வது அறியாது திகைத்து நின்றார். அப்பகுதி பொதுமக்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். வடக்கு போலீசாரிடம் புகார் செய்யுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தினர். அப்போது அந்த வாலிபர் சிகிச்சைக்காக வந்துள்ளேன். புகார் செய்ய நேரமில்லை. எனது மாநிலத்துக்கு திரும்ப செல்ல வேண்டி உள்ளது என்றார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வடமாநிலத்தவர்களை குறி வைத்து அவர்களின் செல்போன் மற்றும் பெண்களிடம் கைப்பையை திருட்டு கும்பல் பறித்துச் செல்கின்றனர். காந்திரோடு பகுதியில் புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக பலர் சுற்றித் திரிகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டும் என்றனர்.