

மதுரை,
மதுரை மாநகராட்சி வீரகாளியம்மன் கோவில் தெருவில் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் அவர் ராமையா தெருவில் ரூ.32 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக தூர்வாரப்பட்டு கரைகள் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமரின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின்கீழ் கள ஆய்வாளர்கள் கோதுமை, அரிசி தேவை குறித்து கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒதுக்கும் தொகுப்பில் இருந்து பொருட்கள் வழங்கப்படும். இந்த திட்டம் குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு பின்னர் முறையாக அறிவிக்கப்படும்.
வெளி மாநிலத்தவர்கள் இங்கு ரேஷன் பொருட்கள் வாங்கும்போது அரிசி, கோதுமை ஆகியவை அரசு நிர்ணயிக்கும் விலையில் வழங்கப்படும். நமது மாநில மக்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டம் மிகவும் அருமையான திட்டமாகும். முதல்-அமைச்சர் ரூ.5 ஆயிரம் கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளார். அவரது வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து அதனை நாசப்படுத்தியது தி.மு.க. தான். ஆனால் கண்மாயினை சீரமைக்கிறோம் என்று அவர்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. கருணாநிதி கைக்கு தி.மு.க. சென்ற போதே அது ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் தி.மு.க. ஒரு நிறுவனம் ஆகி விட்டது. வாரிசுகள் தான் அதில் தலைவராக பொறுப்பேற்பார்கள். கருணாநிதிக்கு பின் ஸ்டாலின், அவருக்கு பின் உதயநிதி ஸ்டாலின் என்ற நிலை தான் உள்ளது. அதனை தமிழக இளைஞர்கள் நன்றாக புரிந்து கொண்டு உள்ளனர். எனவே தி.மு.க.வில் இளைஞர்கள் யாரும் சேரமாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.