

பெங்களூரு,
பெங்களூரு பனசங்கரி எல்லப்பா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் லலிதா. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் அவர் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லலிதா வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மர்மநபர்களால் திருடப்பட்டு இருந்தது.
இதுபோல, எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரமேஷ்நகர் 5-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். நேற்று முன்தினம் காலையில் அவர் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். அந்த சந்தர்ப்பத்தில் ராஜசின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த மதுபாட்டில்களை திருடி சென்று விட்டார்கள்.
இதுபோன்று, விவேக்நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் செல்வராஜ் வீட்டில் ரூ.40 ஆயிரம் மற்றும் 50 கிராம் தங்க நகையையும், அதுபோல, சோழதேவனஹள்ளியில் வசிக்கும் உல்லாஷ் என்பவரது வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தையும் நேற்று முன்தினம் மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக சி.கே.அச்சுக்கட்டு, எச்.ஏ.எல்., விவேக்நகர், சோழதேவனஹள்ளி போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.