ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு அறுவடை வயலில் கச்சா எண்ணெய் தேங்கியதால் பரபரப்பு

கூத்தாநல்லூர் அருகே ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு அறுவடை வயலில் கச்சா எண்ணெய் தேங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு அறுவடை வயலில் கச்சா எண்ணெய் தேங்கியதால் பரபரப்பு
Published on

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள எருக்காட்டூர் என்ற இடத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை அந்த பகுதியில் உள்ள வயல் மற்றும் ஆறுகள் உள்ள இடங்களில் மண்ணில் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் வழியாக வெள்ளக்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. கிளை நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாறு கச்சா எண்ணெய் செல்லக் கூடிய குழாயில் கீழஎருக்காட்டூர் என்ற இடத்தில் கமலாபுரத்தை சேர்ந்த விவசாயி தனசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு 1 ஏக்கர் நிலத்தில் கச்சா எண்ணெய் கசிந்து தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பிட்ட அந்த 1 ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவடை பணிகள் முடிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தாசில்தார் செல்வி, திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் ராஜகோபால், ஓ.என்.ஜி.சி. காவிரி படுகை மேற்பார்வையாளர் மாறன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் குழாய் அடைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே எருக்காட்டூர் பகுதியில் பாண்டவையாற்றில் குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் ஆற்றில் கலந்து பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com