கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயை மாற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு உடைந்த ஓ.என்.ஜி.சி. குழாயை மாற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயை மாற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
Published on

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பூமிக்கு அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதிராமங்கலம் மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி கதிராமங்கலம் வெள்ளாந்தெரு மயான சாலை பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் உடைந்த குழாய் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டது.

இருப்பினும் அப்பகுதி முழுவதும் கச்சா எண்ணெய் வயலில் கசிந்திருந்தது. இதனால் விளை நிலம் பாதிக்கப்பட்டதாக கூறி கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நடந்த 19 நாட்களுக்கு பிறகு நேற்று காலை திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி முன்னிலையில் கச்சா எண்ணெய் வெளியேறிய நடராஜன் வயல் பகுதியில் பள்ளம் தோண்டினர். அப்போது குழாயில் வளைவு பகுதியில் அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சுமார் 10 மீட்டர் நீளத்துக்கு புதிய குழாயை அப்பகுதியில் பொருத்தும் பணி நடைபெற்றது. சம்பவ இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் போராட்டக்குழுவினர் ஒன்று சேர முடியாமல் தடுக்கப்பட்டு எந்த எதிர்ப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி. குழாய் மாற்றப்பட்டது. நேற்று இரவு 7 மணி வரை அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com