ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு

திருமருகல் அருகே மத்தியக்குடி பகுதியில் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
Published on

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம், குத்தாலம், கோபுராஜபுரம், எரவாஞ்சேரி, மத்தியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி.நிறுவனம் சார்பில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் மத்தியக்குடி என்ற பகுதியில் மட்டும் சுமார் 70-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மத்தியக்குடி கன்னிக்கோவில் அருகில் உள்ள எண்ணெய் கிணற்றில் இருந்து செல்லும் குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு மேல் எண்ணெய் வெளியேறியது. இதனைகண்ட அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்தினர் கச்சா எண்ணெய் செல்லும் குழாயின் வால்வை நிறுத்திவிட்டு, உடைப்பை சரிசெய்தனர். எண்ணெய் கசிவு ஏற்பட்டதை பொதுமக்கள் உடனே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- திருமருகல் ஒன்றியம் நரிமணம், குத்தாலம், கோபுராஜபுரம், மத்தியக்குடி பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறுகள் அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆனால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் களை சரிவர பராமரிப்பது இல்லை. இதனால் குழாய்களில் பழுது ஏற்பட்டு அடிக்கடி எண்ணெய் கசிவு ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் விவசாய நிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி பொதுமக்கள் குடிநீருக்கு அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்பட்டு பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த பகுதி மக்களுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய கிராமங்களில் நடைபெறும் போராட்டங்கள் போல் மத்தியக்குடியிலும் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com