

கோவை,
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரியாஸ். இவர் ஆன்லைன் மூலம் அரிசி, புளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வியாபாரிகள் கோபி (வயது 35), சிவராஜ் (41), மகேஷ் (41) மற்றும் அவரின் உதவியாளர் சஞ்சய் (23), டிரைவர் விமல் (27), ராமமூர்த்தி ஆகியோர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு 10 டன் புளி அனுப்பி வைக்கும்படி கேட்டனர்.
உடனே அவரும் கோவைக்கு புளியை அனுப்பி வைத்தார். ஆனால் அதற்கான தொகை ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்தை அவர்கள் 6 பேரும் கொடுக்கவில்லை. இது பற்றி அவர் பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனாலும் அவர்கள் பணத்தை கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து கோவை வந்த ரியாஸ், மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை சந்தித்து புகார் கொடுத்தார்.
அவர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாநகர குற்றப்பிரிவுக்கு கமிஷனருக்கு உத்தர விட்டார். இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேர் மீதும் மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், கூட்டுசதி ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கோபி, சிவராஜ், மகேஷ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக மதுரை, விழுப்புரம், திண்டுக் கல் உள்பட பல இடங்களை சேர்ந்த வியாபாரிகள் கோவை போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து மோசடி தொடர்பாக கோவை மத்திய சிறையில் இருக்கும் 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்கு அனுமதி கேட்டு கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வேலுசாமி, குற்றம் சாட்டப்பட்ட கோபி, சிவராஜ், மகேஷ் உள்பட 5 பேரையும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது.
கைதான 5 பேரும் தமிழகம் முழுவதும் பல வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் அரிசி, புளி, எள், துவரம் பருப்பு, கருப்பட்டி உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளனர். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் எங்களிடம் புகார் செய்து உள்ளனர். குறிப்பாக காஷ்மீர், மத்தியபிரதேசத்தை சேர்ந்த வியாபாரிகளையும் ஏமாற்றி உள்ளனர்.
எனவே இந்த மோசடியில் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது?, மோசடி செய்த உணவு பொருட் களை எங்கே மறைத்து வைத்துள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பின்னர்தான், தலைமறைவாக இருந்த ராமமூர்த்தி சரண் அடைந்து உள்ளார். எனவே அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இவர்களிடம் ஏமாந்த வியாபாரிகள் புகார் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.