விசைப்படகுகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்களை ஏற்றிச்செல்ல வேண்டும், கலெக்டர் நடராஜன் அறிவுறுத்தல்

கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்களை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
விசைப்படகுகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்களை ஏற்றிச்செல்ல வேண்டும், கலெக்டர் நடராஜன் அறிவுறுத்தல்
Published on

கச்சத்தீவு திருவிழாவுக்கு
ராமநாதபுரம்,

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்துகொள்ள உள்ளவர்களை பாதுகாப்பாக அனுப்பி, திரும்ப அழைத்து வருதல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் பேசியதாவது:- கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்துகொள்வதற்காக செல்பவர்கள் அனைவரும், கச்சத்தீவு யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளரின் தலைமையின்கீழ் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. அதேவேளையில் ஒருங்கிணைப்பாளர் யாத்திரிகர்கள் மற்றும் படகுகள் குறித்த அனைத்து விவரங்களையும் உரிய ஆதாரத்துடன் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கவேண்டும்.

மேலும் அரசு அறிவுறுத்தலின்படி யாத்திரிகர்கள் மீன்பிடி விசைப்படகுகளின் மூலமாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு விழாவிற்கு செல்ல விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பாலிதீன் பொருட்கள், கத்தி, அரிவாள் போன்ற பொருட்களையும், விலங்குகள், மருந்து பொருட்கள், பழங்கள், மரங்கள், மரக்கட்டைகள் போன்றவற்றையும் படகுகளில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

கச்சத்தீவு யாத்திரிகைக்காக பயன்படுத்தப்பட உள்ள படகுகளின் உரிமம் மற்றும் காப்பீடு குறித்த விவரங்களை மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும். யாத்திரிகர்கள் செல்லும் ஒவ்வொரு விசைப்படகிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும். இதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதுதவிர தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் சுங்கத்துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com