ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி: திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர் களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி: திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
Published on

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 2017-ம் ஆண்டுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா நேற்று காலை 5.22 மணிக்கு நடைபெற்றது. சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார். இதை முன்னிட்டு கோவிலில் சனிபகவானுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க காக வாகனத்தில் சனிபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

முதல்-அமைச்சர் சாமி தரிசனம்

விழாவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி, தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு முககவசம், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத பைகள் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் ஏமாற்றம்

சனிப்பெயர்ச்சிக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கோவில் நிர்வாகம் விதித்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சாமியை தரிசிக்க கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இதற்கிடையே கோவில் நிர்வாகத்தின் நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று அவசியமில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரிசோதனை சான்று அவசியமில்லை என அறிவித்ததை தொடர்ந்து வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை காலை முதல், இரவு வரை பல ஆயிக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆன்லைன் முன்பதிவு அவசியம்

சனிப்பெயர்ச்சி நாள் முதல் (நேற்று) பிப்ரவரி 12-ந் தேதி வரை 48 நாட்கள் நடைபெறும் திருவிழாவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் சாமி தரிசனம் செய்தால் சனிப்பெயர்ச்சி விழாவில் சாமியை தரிசனம் செய்ததற்கு ஒப்பாகும்.

மேலும் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் www.thirunallarutemple.org ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யாத பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விழாவில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் தரிசனத்தை தவிர்க்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் தலைமையில், கோவில் ஊழியர்கள் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com