கட்டி முடித்து திறக்கப்பட்ட 4 மாதங்களில் அரசுப்பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது, பெற்றோர் போராட்டம்

மடத்துக்குளம் அருகே கட்டி முடித்து திறக்கப்பட்ட 4 மாதங்களில் அரசு உயர்நிலைப்பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது. இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்டி முடித்து திறக்கப்பட்ட 4 மாதங்களில் அரசுப்பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது, பெற்றோர் போராட்டம்
Published on

மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த கடத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 243 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வரை கடத்தூர் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி இணைந்து ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு இடப்பற்றாக்குறையால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் கடத்தூர்புதூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கான கட்டிடம் கட்டப்பட்டது.

தரைத்தளத்தில் 6 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 6 வகுப்பறைகளும் ஆசிரியர் ஓய்வறைகள், அலுவலக அறை என மூன்று அறைகளும் இங்கு கட்டப்பட்டது. கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமலேயே கடந்த ஜூலை மாதம் முதல்-அமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆகஸ்டு மாதம் முதல் வகுப்புகள் செயல்படத்தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மாணவ-மாணவிகள் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பள்ளியின் முன் வராண்டாவில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதியிலுள்ள சிமெண்டு பூச்சு பலத்த சத்தத்துடன் பெயர்ந்து விழுந்தது. இதனையடுத்து உடனடியாக இரவோடு இரவாக மேற்கூரையை பூச சிலர் முயற்சி செய்ததாகவும், பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றுகாலை பள்ளிக்கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாகவும், இதனால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்தப்பகுதியில் திரண்டனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை உள்ளே அனுப்ப மறுத்து வெளியிலேயே அமர வைத்தனர்.

கட்டுமானப்பணிகளை தரமற்ற முறையில் மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பெற்றோர் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மடத்துக்குளம் தாசில்தார் கென்னடி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மாலா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடத்தை பார்வையிட்டனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மாலாவை சூழ்ந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஊரிலுள்ள சுகாதாரக்கேடுகளை கண்டுகொள்ளவில்லை என்றும் பள்ளிக்கு முன் நின்றிருந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை மிரட்டியதாகவும் புகார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் பள்ளிக்கட்டிடம் கட்டி முடித்து 4 மாதங்களிலேயே மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது. நல்ல வேளையாக அந்த நேரத்தில் மாணவ-மாணவிகள் யாரும் இல்லை.

மேலும் கட்டிடத்தின் படிக்கட்டுகள் மற்றும் மாடிப்பகுதியில் தளம் பெயர்ந்து பள்ளம் ஏற்படுகிறது. தரமற்ற முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யவும், ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய பொதுமக்கள் மனுவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்வதாக தாசில்தார் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com