கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்கிறது.
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு
Published on

மைசூரு,

கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூருவில் உள்ள கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இரு அணைகளுக்கும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

இரு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கடந்த 19-ந்தேதி இரவு இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. இந்த நீர் நேற்று முன்தினம் மேட்டூர் அணையை சென்றடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 87.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7,047 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து 6,011 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,273.03 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10,656 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. அதுபோல் அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது.

கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள காவிரியிலும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கபிலா ஆற்றில் பாய்ந்தோடி மைசூரு டி.நரசிப்புரா அருகே திருமக்கூடலு என்ற இடத்தில் சங்கமித்து அகண்ட காவிரியாக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு சென்று வருகிறது. நேற்று காலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் காவிரியில் வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 8,100 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. தற்போது 2,900 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com