

மொரப்பூர்,
கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொரப்பூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மகாலிங்கம் வரவேற்று பேசினார். இதில் உயர்கல்வி துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ஈச்சம்பாடி அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்து கால்வாயில் மலர்தூவி பேசினார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது:-
இடது மற்றும் வலதுபுற கால்வாயில் பாசனத்திற்காக 120 நாட்கள் அல்லது ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும் வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இடதுபுற கால்வாய் மூலமாக 3 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களும், வலதுபுற கால்வாய் மூலமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 6,250 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடையும். இதன் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், அரூர், மற்றும் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள 31 கிராமங்கள் பயனடையும்.
ஈச்சம்பாடி அணையில் தற்போது உள்ள நீர் அளவு நீர்வரத்தை கருத்தில் கொண்டு வினாடிக்கு 70 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட கவுன்சிலர் தனபால், ஸ்ரீராம் கல்வி நிறுவனர் வேடியப்பன், மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், மொரப்பூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வன்னியபெருமாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் சாந்தி வெள்ளையன், சுசீலா சிவராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் சிங்காரம், சிற்றரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமஜெயம், சரவணன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கடேசன் மற்றும் விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கெலவள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சிங்காரம் நன்றி கூறினார்.