

மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் காவிரி புஷ்கர திருவிழாவிற்காக காவிரி ஆற்றில் நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடந்த 13-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப் பட்டது.
இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை சென்றடைந்து, அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது.
அதாவது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு குறைய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் இரவு முதல் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 847 கன அடியாக குறைந்துள்ளது. இந்த அளவு மேலும் குறையுமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.95 அடியாக இருந்தது.