குடிமராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி அணையை தூர்வார நடவடிக்கை: கே.பி.முனுசாமி எம்.பி. பேட்டி

குடிமராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்துள்ளார்.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி அணையை தூர்வார நடவடிக்கை: கே.பி.முனுசாமி எம்.பி. பேட்டி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை கடந்த 1957-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணை தற்போது முதல் முறையாக வறண்டுள்ளது. இந்த நேரத்தில் அணையை தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை 1,000 கன மீட்டர் வரை விவசாயிகள் எடுத்துக் கொள்ள அரசிதழில் ஆணை வெளியாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால், தாசில்தார் மூலம் அனுமதி கடிதம் பெற்று, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வண்டல் மண்ணை அணையில் இருந்து 500 மீட்டர் தூரம் தள்ளி, குறிப்பிடும் பகுதிகளில் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனுமதி வழங்க தாமதம் ஆகும். எனவே ஊரடங்கு முடிந்த பிறகு விவசாயிகள் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான வண்டல் மண் கிடைப்பதோடு, அணைப்பகுதியும் ஆழமாகும், என்றனர்.

இந்த நிலையில் கே.பி.முனுசாமி எம்.பி. கே.ஆர்.பி. அணையை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது மதகு பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அணையும் வறண்டுள்ளதால், அணையை தூர்வார சரியான தருணமாக இது உள்ளது. எனவே அணையை தூர்வாருவது குறித்து தமிழக முதல்-அமைச்சரிடம் பேசி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com