கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம்: சிறு தொழிற்துறையினரிடம் கூடுதல் வட்டி வசூலிக்க கூடாது

சிறு தொழிற்துறையினர் கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் கூடுதல் வட்டி வசூலிக்க கூடாது என்று கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறினார்.
கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம்: சிறு தொழிற்துறையினரிடம் கூடுதல் வட்டி வசூலிக்க கூடாது
Published on

கோவை,

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தில் (கொடிசியா) 2,500 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், என்ஜினீயரிங், மோட்டார் பம்புகள், வார்ப்பு இரும்பு, பிளாஸ்டிக், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்பட அனைத்து விதமான தொழில் செய்பவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களும் உள்ளனர்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க வில்லை. மேலும் தேவையும் குறைவாக இருந்ததால் கொரோனா தாக்கத்துக்கு பிறகு தொழிற்சாலைகளில் கடந்த மாதம் வரை 50 சதவீதம் தான் உற்பத்தி நடைபெற்றது. உற்பத்தியான பொருட்கள் விற்பனை ஆகாததால் வருமானம் இல்லை. இதனால் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்தியாவில் 27 சதவீதம் பேர் தான் மாத தவணையை திருப்பி செலுத்தி உள்ளனர். மீதி 73 பேர் தவணையை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வட்டி வசூலிக்கக் கூடாது

தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரித்து சகஜ நிலை நிச்சயம் திரும்பும். அதற்கு இந்த ஆண்டு இறுதி வரை கூட ஆகலாம். மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பினால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். அப்போது தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகும். இதன் மூலம் வருவாய் அதிகரிக்கும். எனவே தொழில் நிறுவனங்கள் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான காலஅவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் வரை தள்ளி வைக்க வேண்டும். அந்த தொகையை 2 ஆண்டுகளில் திருப்பி செலுத்துகிறோம். மேலும் வட்டிக்கு, கூடுதல் வட்டி வசூலிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். இதில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்.

ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும்

மக்களிடம் பணப்புழக்கம் இருக்க வேண்டும். அதற்கான வழிகளை அரசு தான் செய்ய வேண்டும். அனைத்து பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். இதனால் பொருட்களின் விலை குறைந்து மக்களிடம் வாங்கும் திறன் அதிகரிக்கும். கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையை அரசு தான் ஏற்படுத்த முடியும். கொரோனா தாக்கத்திற்கு பிறகு வார்ப்பட தொழில், விவசாயம் சார்ந்த என்ஜினீயரிங் தயாரிப்பு தொழில்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. மற்ற தொழில்களில் உற்பத்தியான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. பல தொழில்களில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. அதை சரி செய்வதற்கான வழிகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com