ஓசூர் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு: நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்கள் ஓப்படைப்பு

ஓசூர் நகராட்சியுடன் தொரப்பள்ளி அக்ரஹாரம் மற்றும் பேரண்டப்பள்ளி ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பொதுமக்கள் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
ஓசூர் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு: நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்கள் ஓப்படைப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் கதிரவனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊராட்சியில் உள்ள 1500 குடும்பத்தினர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலான கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி போன்றவற்றை செய்து வருகிறோம். எங்களின் முக்கிய வாழ்வாதாரமே இது தான். கெலவரப்பள்ளி அணை, தொரப்பள்ளி அணை மூலம் வாய்கால்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஓசூரை மாநகராட்சியாக்கும் முயற்சியில், எங்களது ஊராட்சியை ஓசூர் நகராட்சியுடன் இணைத்தால், விவசாயம் நலிவடைந்து, விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலை சார்ந்துள்ள எங்கள் வாழ்வாதாரம் கேள்விகுறியாகிவிடும். எனவே, எங்கள் ஊராட்சியான தொரப்பள்ளி அக்ரஹாரத்தை ஓசூர் நகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிட்டு தொடர்ந்து ஊராட்சியாகவே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று எங்கள் ஊராட்சியில் தனி அலுவலர் சென்னகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை இத்துடன் இணைத்துள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரண்டப்பள்ளி ஊராட்சி

இதே போல், பேரண்டப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும், தங்களது ஊராட்சியில் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழிலையும் 75 சதவீத மக்கள் நம்பி இருக்கிறோம். ஓசூர் நகராட்சியுடன் எங்கள் ஊராட்சியை இணைத்தால் விவசாயம் நலிந்து போவதோடு, இந்த ஊராட்சி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகிவிடும். எனவே, எங்கள் ஊராட்சியை ஓசூர் நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2-ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை இத்துடன் இணைத்துள்ளோம் என தெரிவித்து மனு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com