விதை சான்றளிப்பு துறை அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

கோவையில் உள்ள விதை சான்றளிப்பு துறை அலுவலகத்தை சென்னைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் விதைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விதை சான்றளிப்பு துறை அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு
Published on

கோவை

கோவையில் உள்ள விதை சான்றளிப்பு துறை அலுவலகத்தை சென்னைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் விதைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு

கொரோனா தொற்று காரணமாக திங்கட்கிழமைதோறும் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் நேற்று ஏராளமான அமைப்புகள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி மற்றும் விவசாயிகள் தங்களது கைகளில் சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட விதைகளுடன் வந்து கலெக்டர் அலுவலக்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

இடமாற்றம் செய்யக்கூடாது

தமிழ்நாடு விதை சான்றளிப்பு துறை, அங்கக சான்று துறை கோவை யில் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த துறையின் மூலம் விவசாயிகள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் உற்பத்தி செய்யும் காய்கறி விதைகளுக்கு சான்று வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் மொத்தம் 70 சதவீத விதை பண்ணைகள் பதிவு செய்து நடைமுறையில் செயல்பட்டு வருகிறது.

கோவையில் இந்த விதை சான்றளிப்பு துறை அலுவலகம் உள்ளதால் விவசாயிகள் எளிதாக அனுமதி பெற்று வந்தனர். தற்போது இந்த அலுவலகத்தை சென்னைக்கு மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைகள் திறப்பு

தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தை சேர்ந்த வியாபாரிகள், முருகன் தலைமையில் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக வாரம்தோறும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை மற்றும் காய்கறி கடைகள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் அனைத்து கடைகளும் திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com