

திருச்செங்கோடு,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றிய மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன் தலைமை தாங்கினார். நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் வரவேற்று பேசினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, சரஸ்வதி, மாவட்ட தலைவர் உடையவர், மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் திருச்செங்கோடு அண்ணா சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்வதாக கூறி வாகனத்தில் அழைத்து சென்று மலையடிவாரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஆனால் கைது செய்யப்படவில்லை.