குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: ஊட்டியில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: ஊட்டியில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான பொங்கலூர் நா.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மக்கள் சுய தொழில்களை தொடங்கலாம். வீடுகள் கட்டலாம் என்று பல்வேறு சுதந்திரம் அளிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த சட்டத்தில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரவில்லை.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு எதிரானது. இந்த மசோதா முன்மொழியப்பட்டதில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்ததால் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை என்று கூறி வெளியேற்றப்படும் சூழல் உருவாகும். இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்க்கிறோம். நீலகிரி மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், திராவிடமணி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com