

பேரையூர்,
பேரையூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
. மக்களுக்கு அரசு செய்த நல்ல திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சிகள் திணறி போய் உள்ளார்கள். ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தின் கதவை எத்தனை முறை தட்டினாலும், அவர்கள் கொடுத்த தீர்ப்பு ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் மக்களை சந்திக்க வேண்டும் என்று உள்ளது.
அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி விட்டார்கள். எதிர்க்கட்சிகள் மனதளவில் கூட தயாராகவில்லை. ஸ்டாலின் எப்படியாவது தேர்தலை நிறுத்தி விடுவார் என்று நம்பிக்கொண்டு தேர்தல் களத்திற்கு அவர்கள் வரவில்லை. மக்களின் நம்பிக்கையை பெற்று அ.தி.மு.க., தோழமை கட்சிகள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. ஆனாலும் குட்டையை குழப்பி மீன் பிடிக்க பார்க்கிறார்கள். ஆனாலும் மீனை பிடிக்க முடியவில்லை.
அனேகமாக அவர்கள் குழம்பி முடிவதற்குள் தேர்தல் முடிந்து அ.தி.மு.க.வேட்பாளர்கள், தோழமை கட்சி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பார்கள். இவ்வாறு கூறினார்.
இதனை தொடர்ந்து சோழவந்தானில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜனதா கட்சி தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
பா.ஜனதா மாநில செயலாளர் சீனிவாசன் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசினார். இதில் மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.