பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு ஊட்டி தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினர் 40 பேர் கைது

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர். கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு ஊட்டி தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினர் 40 பேர் கைது
Published on

ஊட்டி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சென்னை அருகே ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைக்க வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து இருந்தன.

அதன்படி நேற்று தனிவிமானத்தில் பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்தார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் மாவட்ட தி.மு.க. அலுவலகம், ஊட்டி நகர தி.மு.க. அலுவலகம், வீடுகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதமர் மோடி சென்னை வருகையை கண்டித்து கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் அருகே உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். கட்சி அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து கொடிகளை ஏந்தியபடி தமிழகத்தில் இருந்து பிரதமர் மோடி உடனே வெளியேற வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியபடி காபிஹவுஸ் வழியாக ஊர்வலமாக தபால் நிலையம் முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கயிறு கட்டி தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தினர். அப்போது 2 பேர் தபால் நிலைய வளாகத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால், போலீசார் அந்த 2 பேரை பிடித்தனர். தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் மற்றும் 6 பெண்கள் உள்பட மொத்தம் 40 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். ஊட்டியில் உள்ள சில கடைகள், ஆட்டோக்களிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

ஊட்டி நகர தி.மு.க. சார்பில் ஊட்டி கேஷினோ சந்திப்பு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், காலம் கடத்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்தபடியும், கருப்பு கொடிகளை பிடித்த படியும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கருப்பு பட்டைகளை அணிவித்தனர்.

அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில் பொதுமக்களுக்கு கருப்பு பட்டை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட அமைப்பாளர் ராஜன், நகர அமைப்பாளர் சுரேஷ் தொகுதி செயலாளர் கட்டாரி மற்றும் அமைப்பினர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

கோத்தகிரி மார்க்கெட் திடலில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் கோவை, நீலகிரி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மண்ணரசன், பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த பரத், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மகேஷ், நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.இதில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயன், யாகூப், செல்வன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முடிவில் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க நிர்வாகி ராஜா நன்றி கூறினார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் நகர தி.மு.க.சார்பில் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி அண்ணா சிலை முன்பு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராமசாமி உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் தூதூர்மட்டம் பஜாரில் கடைகளுக்கு முன்புறம் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட தலைவர் மயில்வாகனம் தலைமை தாங்கினார். ஊர்வலம் தூதூர்மட்டம் பஜாரிலிருந்து தொடங்கி கொலக்கம்பை பிரிவு வரை நடைபெற்றது. ஊர்வலத்தில் மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி, திலகர் நகர் கிளை செயலாளர் அழகு (எ) அன்பழகன், மேலூர் ஒன்றிய பொருளாளர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் பகுதியில் தி.மு.க.வினர் தங்களது கட்சி கொடிக்கம்பங்களில் கருப்பு கொடிகளை ஏற்றி வைத்தனர். மேலும் கருப்பு சட்டைகள் அணிந்து இருந்தனர். ஆனால் வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடிகள் கட்டப்படவில்லை. முன்னதாக முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com