மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

ஊட்டி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
Published on

ஊட்டி,

ஊட்டி அருகே உள்ளது தும்மனட்டி கிராமம். இங்கிருந்து தூனேரிக்கு செல்லும் சாலையில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த மதுக்கடைக்கு வரும் மது பிரியர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவது வழக்கமாக இருந்தது. இதனால் அந்த வழியாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதில் இடையூறு ஏற்பட்டது. மேலும் மதுக்கடை அருகே தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மதுப்பிரியர்களின் தொல்லையால் மாணவ- மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. எனவே அந்த மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதையடுத்து மதுக்கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் அப்பகுதியில் மதுக்கடை திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் தும்மனட்டி அருகே கப்பச்சி கிராமத்தில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் மதுக்கடையை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பொதுமக்கள் நேற்று கப்பச்சி கிராமத்தில் உள்ள கோவில் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடையை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனாடுகம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். அதனை தொடர்ந்து தும்மனட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com