திருவொற்றியூரில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூரில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூரில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திருவொற்றியூர் காலடிப்பேட்டை ராமானுஜம் தெருவில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த டாஸ்மாக் கடை வருவதால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.

எனவே இங்கு மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு கொடுத்தனர். ஆனாலும் தொடர்ந்து அதே பகுதியில் மதுக்கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ராமானுஜம் தெரு திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் புதிதாக திறக்க உள்ள மதுக்கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகணேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திருவொற்றியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com