விருதுநகர்–சாத்தூர் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு

விருதுநகர்–சாத்தூர் இடையேயான 4 வழிச்சாலை சீரமைக்கப்படாத நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு செய்துள்ளதை நிறுத்தி வைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்–சாத்தூர் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு
Published on

விருதுநகர்,

கடந்த ஆண்டு மதுரைதிருமங்கலம் இடையே 4 வழிச்சாலை மிகவும் சேதம் அடைந்து இருந்ததால் அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண வசூல் செய்வது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த சாலை சீரமைக்கப்படும் வரை சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரைதிருமங்கலம் இடையே 4 வழிச்சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தது. சாலை சீரமைக்கப்பட்ட பின்னரே அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் முழு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் விருதுநகர்சாத்தூர் இடையே 4 வழிச்சாலை வாகன போக்குவரத்துக்கு தகுதி இல்லாத நிலையில் சேதம் அடைந்துள்ளதாகவும், தடுப்பு வேலிகள் உடைந்து விபத்துகள் ஏற்படும் வகையில் உள்ளதாகவும், கிராம விலக்கு பாதையில் மின் விளக்குகள் ஏதும் இல்லாமல் விபத்துகளை ஏற்படுத்தும் நிலை உள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு இப்பகுதியில் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது. இப்பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் ஆர்.ஆர்.நகரில் உள்ள மேம்பாலம் சேதம் அடைந்துள்ள நிலையில் அதனையும் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

4 வழிச்சாலை அமைக்கப்படும் போது மத்திய அரசு இச்சாலை அமைப்பு செலவுக்காகவும், அதனை தொடர்ந்து சாலையை பராமரிக்கவும் குறிப்பிட்ட பகுதிகளில் சுங்கச்சாவடிகள் அமைத்து வாகனங்களில் செல்வோரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தியது. தற்போது உள்ள நிலையில் இச்சாலை பராமரிப்புக்காக மட்டுமே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேதம் அடைந்துள்ள பகுதிகளில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் நிலையே இருந்து வருகிறது.

இதற்கிடையில் திடீரென கடந்த மாதம் முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்காமல் இருந்தால் 50 சதவீத கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் விருதுநகர்சாத்தூர் இடையே சேதம் அடைந்துள்ள 4 வழிச்சாலையை சீரமைக்காத நிலை தொடரும் நிலையில் இப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை அமல்படுத்தியது ஏற்புடையது அல்ல.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விருதுநகர்சாத்தூர் இடையே 4 வழிச்சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது வரையில் இப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரும் நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com