குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலம்
Published on

ஈரோடு,

ஜமாத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் நேற்று ஊர்வலம் நடத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முஸ்லிம்கள் மற்றும் அரசியில் கட்சியினர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் ஒன்று திரண்டனர்.

இந்த ஊர்வலத்துக்கு ஜமாத்துல் உலமா சபையின் மாநில கவுரவ தலைவர் உமர் பாரூக் தாவூதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் மாவட்ட செயலாளர் பைஜூர் ரஹ்மான் பாக்கவி, முத்தவல்லிகள் ஹுசைன் அலி, முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் இருந்து முஸ்லிம்கள் பெருந்துறை ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

கலெக்டர் அலுவலகம் அருகில் சென்றதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏராளமான போலீசார் பெருந்துறை ரோட்டில் தடுப்பு கம்பிகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் 15 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த புகார் பெட்டியில் போட்டனர்.

அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்ததாவது:-

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு உள்ள குடியுரிமை திருத்த மசோதாவானது, இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பாதிக்கின்ற வகையில் உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, இந்திய மக்களுக்கு வழங்கி உள்ள மத இன பாகுபாடற்ற உரிமைகளை பறிக்கின்ற விதமாகவும், நாட்டு மக்கள் மத்தியில் மத ரீதியாக பிளவை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டு கணக்கெடுப்பு நாடெங்கும் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடி பெயர்ந்து வந்துள்ள முஸ்லிம்களுக்கும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து கடந்த 30 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்துக்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு இருப்பது கவலைக்குரிய விஷயமாகும்.

தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்ச்சிகளையும், கடும் எதிர்ப்புகளையும் சிறிதும் கண்டு கொள்ளாமல் தமிழக அரசு தொடர்ந்து குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரிப்பது கண்டனத்துக்கு உரியதாகும். எனவே குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இந்த ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் ந.விநாயக மூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் ஹசன் அலி, பொதுச்செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம், த.மு.மு.க. மாவட்ட தலைவர் சித்திக், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சபீக், தி.மு.க. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அலி அஸ்கர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் முசீர், செயலாளர் அப்துல் ஹசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com