குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து வேலூரில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைதுசெய்யப்பட்டனர்.
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது
Published on

வேலூர்,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாட்டில் தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தி.மு.க. இளைஞரணி சார்பில் தடையைமீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே தி.மு.க. மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி போராட்டத்தை தொடங்கிவைத்தார். இதில் கலந்துகொண்டவர்கள் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நகலை கிழித்து எறிந்து கோஷமிட்டனர்.

அனுமதியின்றி தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைதுசெய்து வேனில் ஏற்றினர். ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கேயே இறக்கிவிடப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள கிரீன்சர்க்கிள் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com