

ஆலோசனை கூட்டம்
முல்லைப்பெரியாற்றின் தலை மதகு பகுதியான லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்துக்கு கூடலூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு இந்த குடிநீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் கூடலூரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மக்கள் மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் புதுராஜா முன்னிலை வகித்தார்.
கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலம்
லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக, வைகை அணையை தூர்வாரி முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி அங்கிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி கூடலூரில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஊர்வலம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அந்த திட்டத்தை ரத்து செய்யும் வரை தினமும் ஒரு சமுதாயம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை தடுக்க சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது என்றும், வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து இடுகிற சட்டமன்ற வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்றும், இதுதொடர்பாக 15-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மனு அளிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.