‘வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப பரிசீலியுங்கள்’ - மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்குமாறு மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
‘வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப பரிசீலியுங்கள்’ - மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மும்பை,

கொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மும்பையில் வசிக்கும் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1,000 பேர் நேற்று முன்தினம் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி வீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகள் பிரச்சினை தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் 2 பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.கே.தேஷ்பாண்டே முன்னிலையில் நடந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி கூறியதாவது:-

பரிசீலிக்க முடியும்

வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்ப அனுப்புவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க முடியும். ஏனெனில் அது நிர்வாகத்தின் மீதான சுமையை குறைக்கும்.

இதுபோன்ற பயணங்களை அனுமதிப்பதற்கு முன், அவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைகள் நடத்தலாம். இதன் மூலம் அவர்கள் செல்லும் கிராமப்புறங்களில் இந்த நோய் பரவாமல் தடுக்கலாம்.

மாநில அரசு ஒரு கணக்கெடுப்பை நடத்தி, மாநிலத்தில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வது என்பது மாநில அரசாங்கத்துடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசால் கையாளப்பட வேண்டிய ஒரு பிரச்சினை. இது தான் பிரதமரின் உரையின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மாநில அரசு அல்லது மத்திய அரசால் சரியான முடிவு எடுக்கப்படாவிட்டால் எந்தவொரு நேர்மறையான உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

ஒத்திவைப்பு

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி, வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழு ஐகோர்ட்டின் பரிந்துரைகளை ஆராயும். தினக்கூலி தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் குறைகளை மாவட்ட அளவிலான குழுக்கள் ஆராயும், என்றார்.

இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி மே 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com