2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது

சென்னை கலைவாணர் அரங்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது
Published on

சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21-ந்தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் 4-வது நாளாக நேற்றும் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால், கலைவாணர் அரங்கம் அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திரண்டனர். பின்னர், சிலர் இறந்தவர்கள் போல சாலையில் படுத்துக் கொள்ள, அவரை பாடையில் ஏற்றி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். இறந்தவர்கள் போல படுத்திருந்தவர்கள் அருகே பணி ஓய்வுக்கு பின் சி.பி.எஸ். ஊழியரின் நிலை (அனாதை பிணம்) என்று எழுதப்பட்டிருந்த பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

பின்னர் 12 மணியளவில் போராட்டக்காரர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இதையடுத்து கலைவாணர் அரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராமன், இணை கமிஷனர்கள் மனோகர், பர்வேஷ்குமார் ஆகியோர் போராட்டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள், கலைவாணர் அரங்குக்கு வருகை தரும் பிரதமர் மற்றும் முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட அனுமதிக்க வேண்டும், என்று கேட்டனர். அதற்கு போலீசார் அனுமதி மறுக்கவே, தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக நடக்க தொடங்கினர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் முயன்றனர். கைது நடவடிக்கைக்கு அவர்கள் ஒத்துழைக்காததால் குண்டுக் கட்டாக போலீசார் தூக்கி வேனில் அடைத்தனர். இருப்பினும், சிலர் சேப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே போராட சென்றனர்.

அப்போது போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களிடம், முதல்-அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்து தருவதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து போலீசாரின் வாக்குறுதியை ஏற்று போராட்டக்காரர்கள் அமைதியாக வேனில் ஏறினர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com