கர்நாடகத்தில் ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - திடீர் உயர்வால் அரசு அதிர்ச்சி

இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கர்நாடகத்தில் ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பு திடீரென உயர்ந்து உள்ளதால் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
கர்நாடகத்தில் ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - திடீர் உயர்வால் அரசு அதிர்ச்சி
Published on

பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 2,484 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 248 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 227 பேர் மராட்டியம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகம் வந்தவர்கள்.

இதன் மூலம் பாதித்தோர் எண்ணிக்கை 2,732 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிக்பள்ளாப்பூரை சேர்ந்த 50 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 894 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,837 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் 12 பேர், மண்டியாவில் 2 பேர், கலபுரகியில் 61 பேர், யாதகிரியில் 60 பேர், உடுப்பியில் 15 பேர், தாவணகெரேயில் 4 பேர், ஹாசனில் 4 பேர், சிக்பள்ளாப்பூரில் 5 பேர், ராய்ச்சூரில் 62 பேர், மைசூருவில் 2 பேர், விஜயாப்புராவில் 4 பேர், பல்லாரியில் 9 பேர், தார்வார், சித்ரதுர்கா, சிவமொக்கா, பெங்களூரு புறநகரில் தலா ஒருவர், துமகூருவில் 2 பேர், சிக்கமகளூருவில் 2 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 2 லட்சத்து 64 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 12 ஆயிரத்து 411 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 25 ஆயிரத்து 860 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் ஆகும். 100, 115, 135 என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் திடீரென 248 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் வைரஸ் தொற்று உயர்வு கர்நாடக அரசையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com