வேலூரில் ஒரே நாளில் பெண் போலீஸ் உள்பட 10 பேருக்கு கொரோனா - மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்தது

வேலூர் மாவட்டத்தில் பெண் போலீஸ் உள்பட 10 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் முலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181-ஆக உயர்ந்துள்ளது.
வேலூரில் ஒரே நாளில் பெண் போலீஸ் உள்பட 10 பேருக்கு கொரோனா - மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்தது
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் பெண் போலீஸ் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களின் விவரம் வருமாறு:-

வேலூர் நாகநதி கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவர் வேலூர் வடக்குப் போலீஸ் குற்றப்பிரிவில் போலீசாகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு மாதமாக அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். கணியம்பாடியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து பணிக்கு வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அதையடுத்து அவரின் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அவர் வேலூர் வடக்குப் போலீஸ் நிலையத்துக்கு வந்து முகக் கவசம் வாங்கி சென்றுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலையம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் வேலப்பாடி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த அரிசி வியாபாரியின் உறவினர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்த சைதாப்பேட்டை பி.எம்.செட்டி தெருவைச் சேர்ந்த 77 வயது முதியவர், நேதாஜி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்த கருகம்புத்தூரை சேர்ந்த 40 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காய், காய்கறி கடைகளில் வேலை பார்த்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அருகில் கடை நடத்தி வந்த வியாபாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வேலை பார்த்து வந்த, அதே பிஸ்கட் கடையில் வேலை பார்த்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த 25 வயது வாலிபர் மற்றும் 22 வயது இளம்பெண், காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த 47 வயது ஆண், சின்ன லத்தேரியைச் சேர்ந்த 40 வயது ஆண் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேருடன் பழகிய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் சளி மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர். அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com